Tamil Christian Worship

ஒரு பாடலின் கதை...


இப்பாடலை எழுதிய ஜார்ஜ் ஸ்மிட்டன் 1822ம் ஆண்டு பிறந்தார். 1848ம் ஆண்டில் போதகராக அபிஷேகம் பெற்றார். பின்னர் 1850ம் ஆண்டு , நாட்டிங்ஹாம்ஷயரிலுள்ள ஹாக்ஸ்வொர்த்தின் சபை குருவானார். ஆனால் , குறுகிய காலமே பணி செய்து , 1859ம் ஆண்டு , தமது வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் , 1870ம் ஆண்டு , பிராங்பர்ட்டில் திடீரென மரித்தார். அவர் மரித்தபோது , அவருக்கு அறிமுகமானோர் எவரும் அவருடனில்லை. எனவே , அவர் ஒரு தரித்திரரின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார்.

ஒன்பது சரணங்களடங்கிய இப்பாடலை , ஸ்மிட்டன் 1856ம் ஆண்டு மார்ச் மாதம் இயற்றினார். அதை "லெந்து காலக் கவிதை" என்ற தலைப்புடன் , "பென்னி போஸ்ட்" என்ற பத்திரிகைக்கு , G.H.S என்ற தனது பெயரின் முதலெழுத்துக்களுடன் அனுப்பி வைத்தார்.

இப்பாடலானது , லெந்து கால முதல் ஞாயிறின் ஜெபம் மற்றும் நற்செய்திப் பாடம் ( மத்தேயு 4: 1- 11 ) ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

எனவே , பிரான்சிஸ் பாட் என்பவர், 1861ம் ஆண்டு , இப்பாடலின் ஒன்பது சரணங்களை ஆறாகச் சுருக்கி , "பொதுவான ஜெப அட்டவணைக்குப் பொருந்தும் பாமாலைகள்" என்ற தமது பாடல் தொகுப்பில் வெளியிட்டார். அவர் இப்பாடலின் பல பகுதிகளை மாற்றினார்.

தற்கால பாமாலைப் புத்தகங்களில் , இப்பாடல் இன்னும் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. இப்பாடலில் , "அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே , அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார்" (எபிரேயர் 2:18 ) என்ற வசனமும் தொனிக்கிறது.

இப்பாடலுக்கு "ஹெய்ன்லெய்ன்" என்ற ராகம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 1626 முதல் 1686 வரை வாழ்ந்த பால் ஹெய்ன்லெய்ன் என்பவரால் உருவாக்கப்பட்டது. பிரபல இன்னிசை வித்தகரான பாக் , "ஆழத்திலிருந்து" என்ற அர்த்தமுள்ள "ஆஸ்டெர் டீபே" என்னும் இன்னிசைப் படைப்பில் , இந்த ராகத்தை உபயோகித்துள்ளார்.

எனினும் , இந்நாட்களில் பலர் , 1861ல் வெளிவந்த "பழைய , புதிய பாமாலைகள்" என்ற பாமாலைப் புத்தகத்தில் உள்ள இசையமைப்பையே உபயோகிக்கின்றனர்.

நாற்பது நாள் ராப்பகல்
( Forty days and Forty nights )

பாடல் : ஜார்ஜ் ஸ்மிட்டன்
1. நாற்பது நாள் ராப்பகல்
வன வாசம் பண்ணினீர்
நாற்பது நாள் ராப்பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்

2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகம் துணை
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை

3. உம்மைப் போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.

4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை.

5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மாசமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.